இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மாதவிடாய் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையாகி உள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர், பெலகாவி, பிதார் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில தடுப்பூசி மையங்களில், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வந்த பெண்களிடம் மாதவிடாய் உள்ளதா என கேள்வியெழுப்பட்டுள்ளது. அதற்கு ஆம் என தெரிவித்த பெண்கள் ஐந்து நாட்கள் கழித்து வருமாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மாதவிடாயின் போது தடுப்பூசி செலுத்தப்பட்டால், அதிக இரத்த போக்கு, மயக்கம் ஏற்படலாம் என கூறி அந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். மாதவிடாயின் போது தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசே கூறியுள்ள நிலையில், பெண்கள் திரும்ப அனுப்பப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்துள்ள ராய்ச்சூர் துணை கமிஷனர் ஆர்.வெங்கடேஷ், அரசு இதுபோன்ற எந்த கெடுபுடிகளையும் விதிக்கவில்லை. அனைத்து பெண்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது என கூறியுள்ளார்.