மாடுகளைக் காப்பாற்ற மனிதர்களை கொல்லவும் தயங்காத பசுக்குண்டர்கள் வாழும் நாட்டில், 230 மாடுகள் படுக்கவே முடியாத சகதியில் சரியான பராமரிப்பின்றி நின்றுகொண்டிருக்கும் கொடுமையை நம்பமுடிகிறதா? இறந்த மாடு ஒன்றை அப்புறப்படுத்தாமல் போட்டிருக்கிற கொடுமையும் அம்பலமாகி இருப்பது எங்கே தெரியுமா? பாஜக ஆட்சிசெய்யும் கர்நாடகா மாநிலத்தில்தான்.
கர்நாடகா மாநிலம் ஹஸன் மாவட்டத்தில் ராயசமுத்ரா என்ற ஊரில் நாட்டு மாடுகளை பாதுகாக்கும் சரணாலயம் இருக்கிறது. அம்ரித் மஹால் என்ற அந்த சரணாலயம் ஆயிரத்து 524 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது.
இந்த சரணாலயத்தை பல மாதங்களாக சுத்தம் செய்வதே இல்லை, சாணியும் மாட்டுமூத்திரமும் மட்டுமின்றி, சேறும் சகதியும் சேர்ந்து மாடுகள் படுக்கக்கூட முடியாத கொடுமை நிலவுகிறது என்கிறார் சன்னராயப்பட்டினா தாலுகாவைச் சேர்ந்த முற்போக்கு விவசாயி ஒருவர். சமீபத்திய மழை இந்த சரணாலயத்தின் நிலைமையை மிகவும் மோசமாக்கி இருக்கிறது.
கால்நடத்துறை அதிகாரிகளும் ஊழியர்களும்தான் இந்த சரணாலயத்தின் மோசமான நிலைமைக்கு காரணம் என்கிறார்கள் கிராமத்து மக்கள். மாடுகளின் நிலைமை குறித்து பொதுமக்கள் மூலம் செய்திகள் வெளியானவுடன் அதிகாரிகள் அங்கு விரைந்து மாடுகளை மீட்டிருக்கிறார்கள். 230 மாடுகளில் 226 மாடுகளை அந்த சரணாலயத்திலிருந்து பக்கத்து தாலுகாவில் உள்ள இன்னொரு சரணாலயத்திற்கு கொண்டு போக உத்தரவிடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து முதல்வர் எடியூரப்பா மன்னிப்பு கோரினாலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.