கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் ஹோலேநரசிபுரா பகுதியில் அரசு செவிலியர் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கர்நாடகா மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த வகையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர்கள் மாணவர்களும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது தாடியை சேவ் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதாக அம்மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாணவர் சங்கம், அம்மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியது. அந்த கடிதத்தில், ‘செவியிலர் கல்லூரியில் படிக்கும் காஷ்மீர் மாணவர்கள், வகுப்புகளில் பங்கேற்க, குறிப்பாக மருத்துவ பணிகளுக்காக தாடியை சேவ் செய்ய வேண்டும் என்றும் குறைவான அளவு தாடி இருக்குமாறு ட்ரிம் செய்ய வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் வற்புறுத்துகிறது. தாடி வைத்திருக்கும் மாணவர்கள் மருத்துவப் பணிகளின் போது வரவில்லை எனக் குறிக்கப்பட்டு, அவர்களின் கல்விப் பதிவுகள் மற்றும் வருகைப் பதிவேடு பாதிக்கப்படுகிறது.
எந்தவொரு மாணவரும் இத்தகைய பாகுபாட்டிற்கு ஆளாகக்கூடாது. கல்வியை அணுகுவதற்கு அவர்களின் நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை சமரசம் செய்யும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இந்த மாணவர்களின் உரிமைகளை மீறுவது மட்டுமல்லாமல், ஒதுக்கிவைக்கும் சூழலை உருவாக்குகின்றன. இது போன்ற செயல்கள் மாணவர்களின் மத உரிமை மற்றும் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்தில் உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, காஷ்மீர் மாணவர்கள் தாடி வைத்துக்கொள்ள எந்த தடையும் இல்லை என்று கல்லூர் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இது குறித்து கல்லூர் இயக்குநர் ராஜண்ணா கூறுகையில், “இந்த மாணவர்கள் ஒழுங்கற்ற உடை மற்றும் நீண்ட தாடி வைத்திருப்பது குறித்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ளனர். மருத்துவ செயல்முறையின் போது அவர்கள் தங்கள் ஆடைகளை நேர்த்தியாக வைத்திருக்கவும், தாடியை ஒழுங்கமைக்கவும் அறிவுறுத்தப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து அறிந்ததும் மாணவர்களிடம் கலந்துரையாடி, பின்னர் நேர்த்தியான உடையுடன் வரவும், நேரத்துக்கு வரவும், தாடியை கத்தரித்துக்கொள்ளவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.