கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைக் கடந்து தற்போது அரியானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணம் 100 நாளை கடந்து இன்று 107 வது நாளை எட்டியுள்ளது. ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்திற்கு பொதுமக்கள் முதல் அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பலரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதேபோல் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இவரது நடைப்பயணத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 107 வது நாளான இன்று அரியானா மாநிலம் சோனா அருகே தௌஜ் என்கிற இடத்தில் ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ள நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் கலந்து கொண்டுள்ளார்.
ராகுல்காந்தியின் நடைப்பயணம் இன்று இரவு ஃபரிதாபாத்தை அடைகிறது. இதையடுத்து, நாளை டெல்லி செல்லும் ராகுல் காந்தி அங்கிருந்து உத்தரப் பிரதேசம் செல்கிறார். ஜனவரி 26 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் பயணத்தை நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.