
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக 2வது முறையாக தற்போது பதவி வகித்து வரும் கிரேக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இத்தகைய சூழலில் தான் கடந்த 20ஆம் தேதி தற்போதைய ஐசிசி தலைவர் கிரெக் பார்க்லே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக பதவியேற்க மாட்டார் என்றும், நவம்பரில் அவரது பதவிக்காலம் முடிவடையும் போது பதவி விலகுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் இளம் வயதில் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள பெருமையை ஜெய் ஷா பெற்றுள்ளார். பிசிசிஐயின் கவுரவச் செயலாளராக தற்போது பதவி வகித்து வரும் ஜெய் ஷா, ஐசிசியின் தலைவராக டிசம்பர் 1ஆம் (01.12.2024) பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஐசிசியின் தலைவராகும் 3வது இந்தியர் ஜெய்ஷா ஆவார். ஏற்கனவே ஜக்மோகன் டால்மியா மற்றும் சரத்பவார் ஆகியோர் ஐசிசி தலைவராக பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய் ஷா இது குறித்துத் தெரிவிக்கையில், “ஐசிசிஉறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவேன். கிரிக்கெட்டை உலகமயமாக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற உறுதி பூண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய்ஷாவை நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளபதிவில், “ஐசிசி தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுத்துள்ள ஜெய் ஷாவை அனைவரும் கைத்தட்டி வரவேற்போம். ஜெய்ஷா ஒரு சிறந்த பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் இந்தியா உருவாக்கிய சிறந்த ஆல்ரவுண்டர் என்று கிண்டலடித்துள்ளார். மேலும் அவருக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.