
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமைப் பயணம் (பாரத் ஜோடோ யாத்ரா) எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் தொடங்கிய தேச ஒற்றுமைக்கான நடைப்பயணம் கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைக் கடந்து டெல்லி வழியாக தற்போது பஞ்சாப்பை எட்டியுள்ளது.
இந்த மாத இறுதியில் காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் ஒற்றுமைப் பயண யாத்திரை நிறைவடையும் நிலையில், பாதயாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட திமுக உள்ளிட்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் சிக்கலான சூழ்நிலை நிலவி வரும் இத்தகைய நேரத்தில் ஒற்றுமைப் பயண யாத்திரை வலிமையான குரலாக மாறியுள்ளது. அதனால் நீங்களும் பங்கேற்றால் யாத்திரையின் நோக்கத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.