இன்டர்நெட் வசதி மற்றும் செயற்கைக்கோள்கள் மகாபாரதக் காலத்திலேயே இருந்தவைதான். அவை நமக்கு ஒன்றும் புதிதல்ல என திரிபுரா மாநில முதல்வர் பிப்லாப் தேப் பேசியுள்ளார்.
திரிபுரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற நிலையில், முதல்வராக பொறுப்பேற்றவர் பிப்லாப் தேப். இவர் அகர்தலாவின் ப்ரங்கா பவான் பகுதியில் கணினிமயமாக்கல் மற்றும் சீர்திருத்தம் குறித்த மண்டல பயிற்சி வகுப்பைத் தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
அப்போது அவர் இணைய சேவைகள் மற்றும் செயற்கைக்கோள்களை தாங்கள்தான் கண்டுபிடித்தோம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சொல்லிக்கொள்கின்றன. ஆனால், அவையெல்லாம் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னமே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன என்றார். தொடர்ந்து பேசிய பிப்லாப் தேப், ‘இன்டர்நெட் வசதி மற்றும் செயற்கைக்கோள்கள் மகாபாரத காலத்திலேயே இருந்தவைதான். குருஷேத்திரத்தில் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில், பார்வையற்ற மன்னன் திரிதராஷ்டிராவுக்கு போர் குறித்த விவரங்களை அவரது தேரோட்டி சஞ்சாயா விளக்கமாக வழங்கியது எப்படி? ஏனெனில், அந்தக் காலத்தில் செயற்கைக்கோள்களும், இன்டர்நெட் வசதியும் இருந்ததால்தான் அது சாத்தியமானது’ எனப் பேசினார்.
இந்தியாவின் இந்தப் பழம்பெருமை என்னை மேலும் பெருமையடைச் செய்கிறது எனக்கூறிய பிப்லாப், அதனால்தான் உலகளவில் இந்தியர்கள் மென்பொருள் போன்ற துறைகளில் சிறந்துவிளங்குகிறார்கள். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் இந்தியர்கள்தான் உயர்பதவி வகிக்கிறார்கள் எனவும் கூறினார். மேலும், டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் தந்து அதில் நம் பிரதமர் மோடி வெற்றியும் கண்டிருக்கிறார் என அவர் பேசிமுடித்தார்.