தங்கள் உள்நாட்டு விஷயங்களில் தலையிட வேண்டாம் என துருக்கி நாட்டிற்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு நாள் பயணமாக பாகிஸ்தான் வந்திருந்த துருக்கி அதிபர் எர்டோகன் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது நிதி நடவடிக்கை பணிக்குழுவின் (எஃப்ஏடிஎஃப்) ஒத்துழைக்கா நாடுகளின் பட்டியலில் (Grey List) இருந்து பாகிஸ்தான் வெளியேறுவதற்கான முழு ஆதரவை துருக்கி தரும் என கூறினார். இதற்கான நிதி நடவடிக்கை பணிக்குழுக் கூட்டம் இந்த வாரம் பாரிஸ் நகரில் நடைபெற உள்ளது.
மேலும் ஜம்மு காஷ்மீர் குறித்து பேசிய எர்டோகன், "எங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகள் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்திய காலங்களில் ஒருதலைப்பட்சமாக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் இந்த துன்பங்கள் மேலும் மோசமாகிவிட்டன" என தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், "இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்றும், பாகிஸ்தானின் பயங்கரவாதத்தால் இந்தியாவிற்கும் மற்ற பிராந்தியத்தியங்களுக்கும் ஏற்படும் கடுமையான அச்சுறுத்தல் குறித்த உண்மைகளைப் பற்றிய சரியான புரிதலை துருக்கி வளர்த்துக் கொள்ள வேண்டும் நாங்கள் தெரிவித்துகொள்கிறோம்" என தெரிவித்துள்ளது.