Skip to main content

விமான விபத்தில் உயிரிழந்த ஐ.நா -வுக்கான இந்திய அதிகாரி...உதவி கோரும் சுஷ்மா ஸ்வராஜ்...

Published on 11/03/2019 | Edited on 11/03/2019

 

shika

 

கிழக்கு ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானம்  149 பயணிகள், 8 ஊழியர்களுடன் நேற்று காலை கென்யா தலைநகர் நைரோபி நகருக்கு புறப்பட்டது. அந்த விமானத்தில் கனடா, சீனா, அமெரிக்க, கென்யா, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, இந்தியா ஆகிய நாட்டினர் இருந்ததாக தெரிய வந்துள்ளது.மொத்தம் 157 பேர் பலியான இந்த விபத்தில், இந்தியர்கள் 4 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் ஐ.நா.வின் வளர்ச்சித் திட்டங்களுக்கான பிரிவில் இந்தியாவின் அதிகாரியாக செயல்பட்டு வந்த ஷிகா கார்க் பலியாகியுள்ளார். நைரோபியில் நடக்கும் ஐ.நா. சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஷிகாவை தவிர்த்து வைத்யா பன்னாகேஷ், வைத்யா ஹன்சின், நுகவரபு மனிஷா ஆகிய இந்தியர்களும் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தனது டுவிட்டரில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், "எத்தியோப்பியா விமான விபத்தில் உயிரிழந்த  இந்தியர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும், வைத்யா குடும்பத்தார் கனடாவின் டொரான்டோ நகரிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டனர். அவர்களின் குடும்பத்தில் 6 பேர் விமான விபத்தில் இதற்கு முன் பலியாகியுள்ளனர் எனும் செய்தி கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். எத்தியோப்பியா, கென்யாவில் உள்ள இந்திய தூதரகங்கள் உடனடியாக உங்களைத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை அளிப்பார்கள். உங்கள் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்குவார்கள். விமான விபத்தில் துரதிர்ஷ்டமாக உயிரிழந்த ஷிகா கார்க் குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறேன். அவர் கணவரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டும் முடியவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள யாரேனும் உதவுங்கள் " என கோரிக்கை விடுத்துள்ளார்.

சார்ந்த செய்திகள்