இந்தியாவை ஒற்றைக் கட்டுமானமாக்கும் ஆர்.எஸ்.எஸ்! - பினராயி விஜயன் குற்றச்சாட்டு
இந்தியாவின் பன்முகத்தன்மையைத் தகர்த்து, ‘இந்து, இந்தி, இந்துஸ்தான்’ என்ற ஒற்றைக்கட்டுமானமாக இந்தியாவை மாற்ற ஆர்.எஸ்.எஸ் துடிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவ அமைப்பு மாநிலங்கள் பலவீனமடைவதையே விரும்புகிறது. அதன் ஒருபகுதியாக கூட்டாச்சியைத் தகர்த்து இந்து, இந்து, இந்துஸ்தான் என்ற ஒற்றைக்கட்டுமானத்தை இந்தியாவில் அமைத்துவிட எண்ணுகிறது. இதற்காக பாஜகவை அது பயன்படுத்துகிறது. அவர்களின் இந்த முயற்சிகளை நாம் தகர்த்தெறியவேண்டும். காங்கிரஸ்தான் கூட்டாட்சித் தத்துவத்தை முதலில் தாக்கியது. பின்னர் வந்த பாஜக அதன் எல்லைகளை பெரிதாக்கிக் கொண்டிருக்கிறது. மேலும், மத்திய அரசு மாநிலங்களின் உரிமைகளில் தலையிடுகிறது. இதற்கு உதாரணமாக திட்டக்குழுவை நீக்கிவிட்டு, நிதி ஆயோக்கைக் கொண்டுவந்ததை எடுத்துக்கொள்ளலாம். கூட்டாட்சித் தத்துவத்தை மீட்டெடுப்பதே இதற்கு தீர்வாக அமையும். அதோடு மத்திய மாநில அரசுகளுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தி ஜனநாயகத்தைக் காக்கவேண்டும்’ என்கிறார் உறுதியாக.
- ச.ப.மதிவாணன்