மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியா- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 387 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து 388 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 43.3 ஓவரில் 280 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணியில் தரப்பில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 159, லோகேஷ் ராகுல் 102 ரன்கள் குவித்தனர். அதேபோல் இந்திய அணியில் குல்தீப் யாதவ், முகமது ஷமி தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக ஹோப் 78, பூரான் 75 ரன்கள் எடுத்தனர். மேலும் மேற்கிந்திய தீவுகள் அணியில் காட்ரல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் கோல்டன் டக் அவுட் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.