கேரளா, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், ஹிமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் கடும் வெள்ளத்தில் தத்தளித்து வரும் நிலையில், இனி வரும் காலங்களில் இதை விட பெரிய வெள்ளங்கள் இந்தியாவை தாக்கும் சூழல் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை மாற்றங்கள் குறித்தான ஆராய்ச்சி கட்டுரை ஒன்றை காந்திநகர், ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி மாறிவரும் வானிலை மாற்றங்களால் இந்தியாவில் இனி அடிக்கடி மழை வெள்ள நிகழ்வுகள் ஏற்படும் என்ற அதிர்ச்சி தகவலை கண்டறிந்துள்ளனர். இப்படியே சென்றால் இன்னும் சில ஆண்டுகளில் நாட்டின் பெரும்பான்மை பகுதி மழை நாட்களில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
பூமி வெப்பமடைவதையும், அதிக அளவிலான கார்பன் வெளியேற்றத்தையும் குறைத்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆண்டுகளில், வரவிருக்கும் மழை வெள்ளங்களை தடுக்க முடியும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டுக்கு 1.5 டிகிரிக்குள் வெப்பப்படுதலை கட்டுப்படுத்தாவிட்டால் மாபெரும் அழிவை இந்தியா சந்திக்க நேரிடலாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
1.5 டிகிரி தான் அதிகபட்சமாக இருக்க வேண்டும் என கூறப்படும் இந்த நிலையில், இந்த ஆண்டு 2.6 டிகிரி செல்சியஸ் முதல் 8.5 டிகிரி செல்சியஸ் வரை பூமி வெப்பமடையும் என்று கணிக்கப்படுகிறது. மேலும் குறைந்த பருவ மழைக்காலமும், அதிகரிக்கும் திடீர் கன மழை நாட்களும் தென் இந்தியாவில் குறிப்பாக வரட்சியை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. தென் இந்தியாவில் வெப்ப நிலை மாற்றங்கள் அதிகம் நடப்பதே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.