சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி ஒருசாரார் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததுவந்தனர். அதேபோல் ஓ.டி.டி தளங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுந்துவந்தது. மேலும், விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் மோதல் வெடித்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு சமூகவலைதளங்களுக்கும் ஓ.டி.டி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கட்டுப்பாடுகளை அறிவித்தது.
மேலும், இந்தக் கட்டுப்பாடுகள் மூன்று மாதங்கள் கழித்து அமலுக்கு வருமென்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்திருந்தது. இந்தநிலையில், புதிய கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. ஆனால் தற்போதுவரை வாட்சப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்கள் புதிய கட்டுப்பாடுகளுக்கு இணங்கவில்லை. மேலும், அந்த நிறுவனங்கள் மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து, அமெரிக்காவில் இருக்கும் தங்களது தலைமை அலுவலகத்தின் பதிலுக்காக காத்திருப்பதால், புதிய விதிகளை ஏற்றுக்கொள்வது தொடர்பாக முடிவெடுக்க 6 மாதங்கள்வரை அவகாசம் கேட்டுவருகின்றனர்.
இதனால் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்குத் தடை விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒருவேளை மத்திய அரசு கால அவகாசம் வழங்கினால் சமூகவலைதளங்கள் தடையிலிருந்து தப்பிக்க முடியும். இந்தநிலையில், இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர், தாங்கள் புதிய விதிகளுக்கு உடன்பட குறிக்கோள்கொண்டிருப்பாதகவும், அதேநேரத்தில் சில விவகாரங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச வேண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள நிலையில் சமூகவலைதளங்களுக்குத் தடை விதிக்கப்படுமா என்பது விரைவில் தெரியவரும்.