கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டம் நியாமதி தாலுகாவில் ராமேஸ்வரா கிராமத்தைச் சேர்ந்தவர் டாக்டரான சன்னேசப்பா(48). இவரது மனைவி ஷில்பா. சன்னேசப்பா-ஷில்பா தம்பதிக்கு இரு குழந்தைகள் இருந்தனர். பெலகுத்தி கிராமத்தில் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார் சன்னேசப்பா. திருமணத்திற்குப் பிறகு சன்னேசப்பா மது, சூதாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த சன்னேசப்பாவிடம் மனைவி ஷில்பா சண்டையிட்டுள்ளார். மேலும் மனைவி ஷில்பாவின் நடத்தை மீது சன்னேசப்பா சந்தேகம் கொண்டுள்ளார். இதனால் இவர்களுக்கிடையே அவ்வப்போது சண்டை ஏற்பட்டுவந்துள்ளது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி மனைவிக்கு இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகக்கூறி ஸ்டீராய்டு ஊசியை அதிகமாகச் செலுத்தியுள்ளார். இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். ஒருகட்டத்தில் படுத்தப்படுக்கையான மனைவிக்குச் சிகிச்சை அளிக்கக் கூட்டிச் செல்வதாக காரில் அழைத்துச் சென்ற சன்னேசப்பா இறுதியில் மனைவி இறந்துவிட்டதாகச் சடலத்துடன் வந்துள்ளார்.
இந்த உயிரிழப்பு குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், ஷில்பாவின் உடல்பாகங்கள் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. கடந்த 18 ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு முடிவில் டெக்ஸாமேதாஸோன் ஷில்பாவின் உடலில் அதிக அளவிலிருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மருத்துவரான சன்னேசப்பாவை போலீஸார் பிடித்து விசாரித்ததில், மாந்திரீகம் செய்யும் மந்திரவாதி ஒருவரை அணுகியபோது மனித உயிர் ஒன்றைப் பலியிட்டால் உங்களுக்குச் செல்வம் சேரும் எனக் கூறியுள்ளான் அந்த மந்திரவாதி. இதனை நம்பிய சன்னேசப்பா மனைவி ஷில்பாவை பலிகொடுக்கத் திட்டமிட்டுள்ளார். மந்திரவாதியின் பேச்சைவிட்டு மனைவியை ஸ்டீராய்டு ஊசி செலுத்தி கொலை செய்ததை சன்னேசப்பா ஒப்புக்கொண்டான். பின்னவர் அவரை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.