Skip to main content

இதை செய்ய வேண்டும் அல்லது 1000 கோடி நஷ்டஈடு தர வேண்டும் - பாபா ராம்தேவுக்கு மருத்துவ சங்கம் நோட்டீஸ்! 

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

BABA RAMDEV

 

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான  அறிவியல் என்றதோடு, சிகிச்சை, ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, நவீன மருத்துவ மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என கூறினார். இது பெரும் சர்ச்சையானது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (indian medical association) ராம்தேவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், ராம்தேவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியது.

 

மேலும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ராம்தேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நவீன மருத்துவ முறைகள் குறித்த உங்கள் கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் அதனைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

 

இதனையடுத்து ராம்தேவ், தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இந்த சர்ச்சையை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார். இதன்பிறகு ராம்தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டார். அந்தக் கடிதத்தில் ராம்தேவ், அலோபதி மருத்துவம் உயர் இரத்த அழுத்தம், டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து நிவாரணம் அளிக்கிறதா? தைராய்டு, கீழ்வாதம், பெருங்குடல் அழற்சி, ஆஸ்துமா போன்றவற்றுக்கு நவீன மருந்தியல் துறையில் நிரந்தர சிகிச்சை உள்ளதா? என இந்திய மருத்துவக் கூட்டமைப்புக்கு 25 கேள்விகளை எழுப்பியிருந்தார்.

 

இந்தநிலையில், இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் உத்தரகாண்ட் பிரிவு, 1000 கோடி நஷ்டஈடு கேட்டு பாபா ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில், 15 நாட்களுக்குள் அலோபதி மருத்துவத்தை விமர்சித்துப் பேசிய ராம்தேவ், அந்த விமர்சனத்திற்கு அவரே பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட வேண்டுமென்றும், மேலும் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும் கூறியுள்ளது. இல்லையென்றால் அலோபதி மருத்துவத்தை விமர்சித்ததற்காக 1000 கோடி நஷ்டஈடு தர வேண்டும் எனவும் கூறியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்