பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மெகா கூட்டணி அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், முதலமைச்சராக கடந்த வாரம் மீண்டும் பொறுப்பேற்றார். முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சரானார்.
இந்த நிலையில், மேலும் 31 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 பேர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 11 பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பீகார் மாநில ஆளுநர் பகு சௌஹான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
லாலு பிரசாத் யாதவின் மூத்த மகனான தேஜ் பிரதாப் யாதவும், மாநில அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார். கடந்த பா.ஜ.க.- ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் இஸ்லாமியர் ஒருவர் மட்டுமே அமைச்சராக இருந்தார். தற்போது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இஸ்லாமியர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.