இந்தியாவில் கரோனா பாதிப்பு தற்போது குறைந்துவருகிறது. கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்தாலும், மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பிருப்பதால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம் என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். மேலும், காரனோவை எதிர்கொள்வதற்கு பரிசோதனைகளை அதிகரிப்பது அவசியம் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.
இந்தநிலையில், வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தக் கருவி மூலம் 15 நிமிடங்களுக்குள் கரோனா பரிசோதனை செய்து, முடிவை தெரிந்துகொள்ளலாம். இதன்விலை 250 ரூபாயாகும். புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தக் கருவியைத் தயாரித்துள்ளது.
வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கருவியை, கரோனா அறிகுறி உள்ளவர்களும், கரோனா பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், இந்தக் கருவியைப் பயன்படுத்திச் செய்யும் சோதனையில் கரோனா பாசிட்டிவ் என்றால் கரோனா இருப்பது உறுதியென்றும், ஒருவேளை நெகடிவ் என்றால் உடனே அவர்கள் ஆர்.டி - பி.சி.ஆர் சோதனை செய்துகொள்ள வேண்டுமென்றும் கூறியுள்ளது. மேலும் சோதனை முடிவுகள் தங்களது சர்வரில் மிக இரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய கருவி மூலம் வீட்டிலேயே கரோனா பரிசோதனை செய்துகொள்ள, அதற்கான செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். பின்னர் செயலியில் கூறியுள்ளபடி சோதனையை மேற்கொள்ள வேண்டும். பரிசோதனை முடிந்த பிறகு அதற்கான முடிவு செயலிலேயே காட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.