டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்கு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய போதும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இந்த சூழலில் நேற்று (02-02-24) விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஐந்தாவது முறையாக சம்மன் அனுப்பியது. ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார்.
5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணையை வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தவுள்ளதாக டெல்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் டெல்லியில் பள்ளி அடிக்கல் நாட்டு விழாவில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் பேசிய அவர், ''ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகளின் மூலம் தனக்கு பாஜக அழுத்தம் தருகிறது. பாஜகவில் சேரும்படி நிர்பந்திகின்றனர். பாஜகவில் நான் ஒருபோதும் சேரப் போவதில்லை. ஒன்றிய பாஜக அரசு எங்களுக்கு எதிராக சதி செய்ய முயன்றாலும் நான் அடிபணிய மாட்டேன். ஒன்றிய அரசின் அனைத்து விசாரணை அமைப்புகளும் இன்று வரை எங்களை பின் தொடர்ந்து வருகின்றன. ஆம் ஆத்மியின் ஏழு எம்.எல்.ஏக்களிடம் பாஜக 25 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளனர். பள்ளி மற்றும் மருத்துவமனைகளுக்கு ஒன்றிய பாஜக அரசு பட்ஜெட்டில் நான்கு சதவீதம் மட்டுமே செலவு செய்கிறது. ஆனால் டெல்லி அரசு ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மருத்துவமனைகளுக்கு பட்ஜெட்டில் இருந்து 40 சதவீதம் செலவு செய்கிறது'' என்றார்.