Skip to main content

பஹல்காம் தாக்குதல்; பயங்கரவாதிகளை துணிச்சலாக எதிர்கொண்ட குதிரை ஓட்டி வீர மரணம்!

Published on 23/04/2025 | Edited on 23/04/2025

 

Horse rider bravely confronts terrorists, dies a heroic hit by Pahalgam incident

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் எனும் பகுதியில் இருந்த சுற்றுலா மேற்கொண்டிருந்த பயணிகள் நேற்று (22-04-25) பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். மேலும், 17 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காஷ்மீருக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டவர்கள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால், பஹல்காம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் புகைப்படங்களைக் கண்டறிந்து அவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதில், இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளனர்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க தகவல் தெரிவித்து வருகின்றனர். இந்த தாக்குதலில், ஆண்கள் மட்டும் குறிவைக்கப்பட்டதாகவும், இந்துவா? முஸ்லிமா? என்று மதத்தை கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் வாயிலாக தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில், துணிச்சலாக பயங்கரவாதியின் துப்பாக்கியைப் பறிக்க முயன்ற குதிரை ஓட்டி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. 

Horse rider bravely confronts terrorists, dies a heroic hit by Pahalgam incident

சுற்றுலா இடமான பஹல்காம் பகுதியில் சையத் ஆதில் ஹுசைன் ஷா என்பவர் குதிரை ஓட்டியாக இருந்துள்ளார். சம்பவம் நடந்த தினத்தன்று, குதிரை சவாரி கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாத கும்பல் தாக்குதல் நடத்தினர். அப்போது தனது குதிரையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சையத் ஆதில் ஹுசைன் ஷா, பயங்கரவாதி ஒருவருடன் சண்டையிட்டு அவரது துப்பாக்கிய பறிக்க முயன்றார். அப்போது, சையத் ஆதில் பரிதாபமாக சுட்டுக்கொல்லப்பட்டார். 

வயதான பெற்றோர், மனைவி மற்றும் குழந்தைகளோடு வாழ்ந்து வந்த சையத் ஆதில், தனது குடும்பத்தின் ஒரே வருமான ஈட்டுபவராக இருந்துள்ளார். பயங்கரவாத தாக்குதலில், சையத் ஆதில் இறந்ததால் அவரது குடும்பத்தின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இது குறித்து சையத் ஆதில் ஹுசைன் ஷாவின் தந்தை சையத் ஹைதர் ஷார் தெரிவிக்கையில், ‘எங்கள் குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவராக எனது மகன் மட்டுமே இருந்தார். வழக்கம் போல் அவர் வேலைக்காக பஹல்காம் பகுதிக்குச் சென்றார். நேற்று 3 மணியளவில் அங்கு தாக்குதல் சம்பவம் நடந்ததாக எங்களுக்கு தகவல் வந்தது. அவருக்கு போன் செய்தோம், ஆனால் அவருடைய செல்போன் ஸ்விட் ஆஃப் செய்யப்பட்டிருந்தது.  அதன் பிறகு அவருடைய செல்போன் ஆன் ஆனதும் போன் செய்தோம், ஆனால், யாரும் எடுக்கவில்லை. அதனை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு சென்று விசாரிக்கையில் எனது மகன் இறந்துள்ளார் என்பது தெரியவந்தது. இந்த தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் யாராக இருந்தாலும் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்’ என்று சோகத்தோடு பேசினார். 

சார்ந்த செய்திகள்