சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அந்தச் செய்திகளை சச்சின் பைலட் மறுத்துள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோருக்கு மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள சூழலில், அசோக் கெலாட் ஆட்சியைக் கவிழ்க்க முயல்வதாகக் கூறி சச்சின் பைலட்டை துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியது காங்கிரஸ் கட்சி.
அசோக் கெலாட் வீடு மற்றும் சொகுசு விடுதியில் நடைபெற்ற எம்.எல்.ஏ க்கள் கூட்டங்களில் சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கலந்துகொள்ளவில்லை. மேலும், அசோக் கெலாட் ஆதரவு எம்.எல்.ஏ க்கள் ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில், சச்சின் பைலட்டின் ஆதாராளர்கள் வேறொரு ரிசார்ட்டில் தங்கியுள்ளனர். இருவருக்கும் இடையேயான சமாதான பேச்சுவார்த்தைகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படும் சூழலில் சச்சின் பைலட் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணையப்போவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்தத் தகவல்களை சச்சின் பைலட் தரப்பு மறுத்துள்ளது.
இந்தச் செய்திகள் குறித்து சச்சின் பைலட் அளித்துள்ள விளக்கத்தில், "நான் பா.ஜ.க.வில் இணையமாட்டேன். நான் இன்னும் காங்கிரஸ் கட்சி உறுப்பினராகவே இருக்கிறேன். நான் பா.ஜ.க.வில் சேரவில்லை. பா.ஜ.க.வில் இணையும் திட்டமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்னை பா.ஜ.க.வுடன் இணைக்க முயல்வது காங்கிரஸ் தலைமையிடம் என்னை இழிவுபடுத்தச் செய்யும் செயல்" எனத் தெரிவித்துள்ளார்.