இந்தியாவில் கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு முழு வீச்சில் செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவாக்சின் முழுமையான இந்தியத் தயாரிப்பாகும். கோவிஷீல்ட், அஸ்ட்ராஜெனெகா எனும் இங்கிலாந்து தடுப்பூசியின் இந்திய தயாரிப்பாகும். இந்த இரு தடுப்பூசிகள் மட்டுமின்றி ஸ்புட்னிக் V, மாடர்னா ஆகிய வெளிநாட்டுத் தடுப்பூசிகளுக்கும் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவை இன்னும் முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரவில்லை.
இதுமட்டுமின்றி ஸைடஸ் காடிலா நிறுவனம், தனது தடுப்பூசிக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளது. இத்தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்பட்டால், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டாவது கரோனா தடுப்பூசியாக இது இருக்கும். இதற்கிடையே ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிகல் - இ நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோர்பேவாக்ஸ் தடுப்பூசி, செப்டம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசி, முதல் இரண்டு கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கையான முடிவுகளைக் காட்டியுள்ளதாகவும், தற்போது மூன்றாவது கட்ட பரிசோதனையில் இருப்பதாகவும், இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரலாம் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் மாத இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் ஒரு டோஸ் 250 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தடுப்பூசியின் 30 கோடி டோஸ்களை வாங்க 1500 கோடி ரூபாய் முன்பணமாகச் செலுத்தப்படும் என மத்திய அரசு கடந்த மாதம் கூறியதும் கவனிக்கத்தக்கது.