பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கட்டண பில் (BILL RECEIPT)சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதாவது "POSTPAID" எனப்படும், மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம், அவர்களுக்குரிய கட்டண ரசீதியை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வந்தது. ஆனால் தற்போது இந்த சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்தும் வகையில், இத்தகைய நடவடிக்கையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் 'பி.எஸ்.என்.எல்' நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை குறுந்தகவல்கள் மூலமாகவும், இ- பில் மூலமாகவும் செலுத்த வேண்டிய கட்டணத்தை எளிதில் அறியலாம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு இணைப்பிற்கும், மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூபாய் 10 தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவன சேவை மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.