கிரிக்கெட் வீராங்கனையாக விரும்பிய மருத்துவ மாணவி, தனது படிப்பைத் தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
உத்தர்காண்ட் மாநிலம், உதாம் சிங் மாவட்டத்தில் உள்ள ஜாஸ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவானி பன்சால். இவர் கர்வால் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் அரசு மருத்துவமனையில் நான்காம் ஆண்டு மருத்துவம் படித்துவந்தார். கடந்த சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்ட சிவானி, பிப்ரவரி 25ஆம் தேதி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது மரணத்தில் சந்தேகம் நிலவிவந்த நிலையில், அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், நான் மருத்துவராக வேண்டும் என்று ஒருநாளும் விரும்பியதே இல்லை. நான் கிரிக்கெட்டராக வேண்டும் என்றே ஆசைப்பட்டேன். என்னால் இனிமேலும் போராட முடியாது’ என எழுதி வைத்துவிட்டு, தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதுகுறித்து அந்தக் கல்லூரியின் முதல்வர், ‘சிவானி தனது பள்ளிப்படிப்பில் எப்போதும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி. ஆனால், கல்லூரியில் அவரால் படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியவில்லை. தொடர்ந்து பல பாடங்களில் தோல்வியடைந்ததால், அவர் மிகுந்த மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக சிகிச்சைகளும் எடுத்துவந்தார்’ என தெரிவித்துள்ளார். சிவானி சிறந்த மதிப்பெண்களுடன் பள்ளிப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்ததால், அவரது தந்தை அவரை மருத்துவப் படிப்பில் சேர்த்துவிட்டதாக கூறப்படுகிறது.