டெல்லி சட்ட சபையையும், செங்கோட்டையையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பூட்டியிருந்த தூக்கிலிடும் அறையைச் சோதனை செய்தபோது இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் அரசு, தலைநகரைக் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றிய பிறகு தற்போதைய டெல்லி சட்டசபை வளாகம், மத்திய சட்ட சபையாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் பின்னர் 1926 ஆம் ஆண்டு அந்த சட்டசபை வளாகம் நீதிமன்றமாக மாற்றப்பட்டதாகவும் கூறியுள்ள டெல்லி சட்டமன்றத்தின் சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல், அந்த நீதிமன்றத்துக்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களை அழைத்து வர தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த சுரங்கப்பாதை எவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறித்துப் பேசிய ராம் நிவாஸ் கோயல், "தூக்கிலிடும் அறை இங்கு (சட்டசபையில்) இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதை இதுவரை திறந்ததில்லை. இது 75வது சுதந்திர தினம் என்பதால், அந்த அறையைச் சோதனை செய்ய முடிவெடுத்தோம். அப்போது சுரங்கப்பாதை இருப்பது தெரியவந்தது" எனத் தெரிவித்துள்ளார்.
மெட்ரோ பணிகளாலும், கழிவுநீர் அமைப்புகளாலும் சுரங்கப்பாதை அழிந்துவிட்டதால் அதை மீண்டும் தோண்டப்போவதில்லை எனவும் டெல்லி சபாநாயகர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.