ஹரியானா கலவரம் : முக்கிய குற்றவாளியாக ராம் ரஹீமின் மகள் ஹனிப்ரீத்!
தனது பக்தைகள் இருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக, கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹரியானாவின் சிறப்பு சி.பி.ஐ நீதிமன்றம் சர்ச்சைக்குரிய சாமியார் ராம் ராஹீம் சிங்கை குற்றவாளி என அறிவித்தது. இதில் அவருக்கு 20 ஆண்டுகள் சிறைதண்டனையும் ரூ.30 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அதேநாளில், ஹரியானா, பஞ்சாப் என பல பகுதிகளில் கலவரங்கள் வெடித்தன. இதில் 41 பேர் உயிரிழந்தனர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்தக் கலவரம் ரூ.5 கோடி கொடுத்து தூண்டிவிடப்பது என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு, காவல்துறையினர் உட்பட பலர் கைதுசெய்யப்பட்டனர்.
தற்போது, இந்தக் கலவரத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகள் 43 பேரின் பெயர்ப்பட்டியலை ஹரியானா நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதில் முதல் இடத்தில் ராம் ரஹீம் சிங்கின் வளர்ப்பு மகள் ஹனிப்ரீத் பெயரும், இரண்டாவதாக தேரா சச்சாவின் பேச்சாளர் ஆதித்யா இன்சான் பெயரும் இடம்பெற்றுள்ளன. இதில் ஹனிப்ரீத் நேபாளத்திற்கு தப்பிச்சென்றுவிட்டதாகவும், தனிப்படை அமைத்து தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- ச.ப.மதிவாணன்