டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. நேற்று (03.09.2021) மட்டும் இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மூன்று பதங்கங்களை வென்றது.
இந்நிலையில், பி4 மிக்ஸ்டு 50 மீட்டர் பிஸ்டல் (எஸ்.எச் 1) பிரிவில், இந்தியாவின் மணீஷ் நர்வால் தங்கம் வென்று சாதித்துள்ளார். அதே போட்டியில், ஏற்கனவே 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் வெண்கலம் வென்ற சிங்ராஜ் அதானா, வெள்ளி வென்று சாதனை படைத்தார்.
மணீஷ் நர்வாலும், சிங்ராஜ் அதானாவும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இதனையடுத்து ஹரியானா மாநில அரசு, தங்கம் வென்ற மணீஷ் நர்வாலுக்கு 6 கோடி ரூபாயையும், வெள்ளி வென்ற சிங்ராஜ் அதானாவிற்கு 4 கோடி ரூபாயையும் பரிசாக அறிவித்துள்ளது.
இதற்கிடையே ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் கிருஷ்ணா நாகர் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியாவிற்கு குறைந்தது வெள்ளி பதக்கம் உறுதியாகியுள்ளது.