கேரள மாநிலம் கோழிக்கோடு வடக்கு கண்ணூரைச் சேர்ந்தவர் பிரசாந்த். 29 வயதான இந்த இளைஞர் கடந்த மாதம் அக்டோபர் 1ஆம் தேதியன்று தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அதோலி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
பிரசாந்த் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதி வைத்த கடிதம் காவல்துறையினர் கைகளில் கிடைத்த பின்பே பிரசாந்த் மரணத்திற்கான காரணம் தெரிந்துள்ளது. பிரசாந்த் எழுதியுள்ள கடிதத்தின் படி, அவர் கடந்த 2014ம் ஆண்டு முதல் முடி உதிர்விற்கு சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். சிகிச்சையளித்த மருத்துவர் பிரசாந்த்திற்கு சில மருந்துகளைப் பரிந்துரை செய்துள்ளார். மேலும் மருத்துவர், ‘மருந்துகளைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு முடி முழுவதும் உதிர்ந்துவிடும். பிறகு மீண்டும் அடர்த்தியாக வளரும்’ என்றும் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் கொடுத்த மருந்துகளை உபயோகப்படுத்திய சில தினங்களில் பிரசாந்த்திற்கு கண் புருவங்கள் போன்ற பிற இடங்களிலும் முடிகள் உதிர்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பிரசாந்த் வெளி இடங்கள் பொது நிகழ்ச்சிகள் போன்றவற்றிலும் கலந்துகொள்வதை நிறுத்திக் கொண்டுள்ளார். முடி உதிர்வுகள் நிற்காததால் மனமுடைந்த பிரசாந்த் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து விசாரித்து வரும் காவல்துறையினர், “தற்கொலை வழக்கில் மருத்துவர்களின் கூற்றுகளும் ஏற்கப்படும். எங்களது முதல் கட்ட விசாரணையில் எந்த விதமான முதன்மைக் குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது” எனக் கூறினார்.