காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களுடனான களத்தொடர்பை இழந்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார்.
தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சந்தித்துவரும் தொடர் தோல்விகளைச் சுட்டிக்காட்டி அக்கட்சியினுள்ளேயே ஏகப்பட்ட விமர்சனங்கள் மற்றும் அதிருப்தி எழுந்து வருகிறது. குறிப்பாக மூத்த தலைவர்கள் பலரும், கட்சியில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மக்களுடனான களத்தொடர்பை இழந்துவிட்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "நாம் அனைவரும் தோல்விகளைப் பற்றிக் கவலைப்படுகிறோம், குறிப்பாக பீகார் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் குறித்து. தோல்விக்கு நான் தலைமையைக் குறை கூறவில்லை. நாம் அடிமட்ட மக்களுடனான களத்தொடர்பை இழந்து விட்டோம். முக்கிய தலைவராக உள்ளவர்கள் தங்கள் கட்சியை நேசிக்க வேண்டும்.
தேர்தல்களில் 5-நட்சத்திர கலாச்சாரத்தால் வெற்றிபெற முடியாது. இன்று தலைவர்களின் பிரச்சனை என்னவென்றால், அவர்கள் தேர்தலில் போட்டியிட இடம் கிடைத்தால், முதலில் 5 நட்சத்திர ஓட்டலை முன்பதிவு செய்கிறார்கள். மோசமான சாலை இருந்தால் அவர்கள் அங்குச் செல்ல மாட்டார்கள். நேரம் கடைப்பிடிப்பதும் 5- நட்சத்திர கலாச்சாரத்தால் கைவிடப்பட்டது. இது போன்றவைகளால் ஒருவர் தேர்தலில் வெற்றி பெற முடியாது.
எங்கள் கோரிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. எங்கள் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு தலைமை ஒப்புக் கொண்டுள்ளது. அவர்கள் ஒரு தேசிய மாற்றாகக் கட்சியைப் புதுப்பிக்க விரும்பினால் தலைமையே முன்னின்று தேர்தல்களை நடத்த வேண்டும். கடந்த 72 ஆண்டுகளில் கட்சியின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த இரண்டு பதவிக் காலங்களில் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.