பாஜக கவுன்சிலரை மரத்தில் கட்டிவைத்து அடித்த குஜராத் மக்கள்!
முன்னறிவிப்பின்றி குடிசைகள் இடிக்கப்பட்டதைக் கண்டித்து பாஜக கவுன்சிலரை மரத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில், முன்னறிவுப்புகள் இன்றி மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் குடிசைகளை இடித்துத் தள்ளியது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், அங்குவந்த கவுன்சிலர் ஹஷ்முக் பட்டேலை மரத்தில் கட்டிவைத்து அடித்து, அவரது உடைகளைக் கிழித்துள்ளனர். இவர் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை இதில் தொடர்புடைய 38 பேரை கைது செய்துள்ளது. இதுகுறித்து, ஹஷ்முக் பட்டேல் மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை பற்றி எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த நடவடிக்கை குறித்து ஹஷ்முக் பட்டேலுக்கு தகவல் தெரிவித்ததாக மாவட்ட நிர்வாக அதிகாரி பொதுமக்களிடம் தெரிவித்ததாகவும், அதனால்தான் பொதுமக்கள் அவரை கட்டிவைத்து அடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.