கரோனா சிகிச்சையில் முக்கியமான மருந்தாக அறிவிக்கப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை விற்பனை செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இந்தியாவில் 700 ஐ கடந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா பாதிப்பால் 16 பேர் உயிரிழந்த நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்திய அரசு 21 நாட்கள் லாக்டவுன் அறிவித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள், தங்களது பாதுகாப்புக்காக மலேரியா மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியிருந்த சூழலில், இதன் ஏற்றுமதியை மத்திய அரசு அண்மையில் தடை செய்தது.
போதிய மருந்து இருப்பை உறுதி செய்யும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட சூழலில், இந்த மருந்தை விற்பனை செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி இந்த மருந்தை அத்தியாவசிய மருந்துகள் பட்டியலின் கீழ் கொண்டு வந்து, அதன் விற்பனையை முறைப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், ''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர் காக்கும் வகையில் மலேரியா நோய்க்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனால் பொதுநலன் கருதி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துவதும் கட்டுப்படுத்துவதும் அவசியமாகிறது. அவற்றின் தவறான பயன்பாட்டைத் தடுப்பதும் அவசியமாகும். எனவே, மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940, பிரிவு-பி யின் கீழ் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதால் உடனடியாக நடைமுறைக்கு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை மருத்துவர்களின் பரிந்துரைப்படி மட்டுமே வழங்கப்படவேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.