
புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தில் சி.எஸ்.ஆர். நிதியின் கீழ் டாக்டர் அம்பேத்கர் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அம்மையத்தின் திறப்புவிழா, ஏனாம் சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில அரசின் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் இன்று நடைபெற்றது.
மையத்தைத் திறந்து வைத்து முதலமைச்சர் நாராயணசாமி பேசுகையில், “அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தலைவர் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான பொதுத் தலைவர்.
சமீபத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கான முழு கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டத்தை புதுச்சேரி அரசு அமல்படுத்தியுள்ளது.
இதுபோல வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை அரசு ஏற்கும் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளோம். இத்திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்” என்றார்.
முன்னதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேசுகையில், “புதுச்சேரி மக்களுக்கு எதிராக இருப்பவரை புதுச்சேரியைவிட்டு அனுப்பும் வகையில், வரும் 8ஆம் தேதி முதல் 12ஆம் தேதிவரை நடைபெறவுள்ள போராட்டத்தில், புதுச்சேரியை ஸ்தம்பிக்கச் செய்யவேண்டும். கிரண்பேடிக்கு பகிரங்கமாக ஒரு சவால் விடுகிறேன். புதுச்சேரியில் ஒரு தொகுதியில் நின்று கிரண்பேடியால் ஜெயிக்கமுடியுமா? டெபாசிட் வாங்க மாட்டார். ஏனாமில் போட்டியிட்டால் ஒரு ஓட்டுக்கூட கிடைக்காது” என சவால் விடுத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.