புதுச்சேரி திருபுவனையில் புதுச்சேரி அரசுக்கு சொந்தமான கூட்டுறவு நூற்பாலை (ஸ்பின்கோ) இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 350க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடந்த 3 மாதமாக ஸ்பின்கோ நூற்பாலை இயக்கப்படாமல் மூடப்பட்டுள்ளது. மேலும் தனியார் மயமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அனைத்து தொழிற்சங்கத்தினர், உடனடியாக நூற்பாலையை திறந்து அரசே ஏற்று நடத்த வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் தனியாக நிதி ஒதுக்கி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அண்ணா சிலை அருகே பஞ்சை தின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, “மூடப்பட்டுள்ள பஞ்சாலையில் சுமார் 2 கோடி ரூபாய் அளவில் நூல்கள் தேங்கி கிடக்கிறது. இதனை விற்பனை செய்தாலே ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்கலாம். பஞ்சாலையின் மேலாண் இயக்குநராக உள்ள குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குநர் சக்திவேலை உடனடியாக இடமாற்றம் செய்து தகுதியான அதிகாரியை நியமனம் செய்து பஞ்சாலையை அரசே நடத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.