புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்றைய பேரவை நடவடிக்கையில், "புதுச்சேரி மாநிலத்தில் மின் துறையை தனியார் மயமாக்கப்படுவதால் அரசின் பல ஆயிரம் கோடி சொத்துக்களை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது" என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் (தி.மு.க) சிவா கேள்வியெழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் "மின் துறையை தனியார் மயமாக்குவது அரசின் கொள்கை முடிவு. திமுக உறுப்பினர் தவறான தகவலை தருகின்றார். புதுச்சேரி மின் துறையில் ரூ.551 கோடி சொத்துக்கள் தான் உள்ளது. ரூ.257 கோடி மதிப்பிலான அரசின் நிலங்கள் தனியாருக்கு வழங்கப்படாது" என விளக்கமளித்த அவர் 'ரூ.536 கோடி மின் பாக்கியை அரசே வசூலிக்கும்' என பதிலளித்தார்.
அதையடுத்து, "மின் துறையை தனியார் மயமாக்க அரசு கொள்கை முடிவெடுத்துள்ளது புதுச்சேரி மாநில மக்களுக்கு எதிரான முடிவு. முதலமைச்சரின் எண்ணத்திற்கு எதிரான முடிவு" எனக் கூறி தி.மு.க - காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.