கோரக்பூர் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்க மறுத்த நிறுவன உரிமையாளர் கைது!
கோரக்பூர் பி.ஆர்.டி. மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யாத புஷ்பா, ஆக்சிஜன் சிலிண்டர் நிறுவனத்தின் உரிமையாளரை இன்று தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 10, 11 தேதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் சிகிச்சை பெற்றுவந்த குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு வாரத்திற்குள் பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்தது.
முதல்வர் யோகி அமைத்த தனிப்படை இந்த விவகாரத்தில் தொடர்புடைய மருத்துவர்கள் உள்ளிட்ட 7 பேரை இரண்டு வாரங்களுக்கு முன்னர் கைது செய்தது. இருந்தபோதிலும், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வழங்குவதில் அலட்சியம் காட்டிய புஷ்பா ஆக்சிஜன் சிலிண்டர்கள் நிறுவனத்தின் உரிமையாளர் மணீஷ் பந்தாரி தலைமறைவாகியிருந்ததால் அவரைக் கைதுசெய்ய இயலவில்லை.
நீண்டநாட்களாக தலைமறைவாக இருப்பதால், இவரையும் குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் பிடிவாரண்ட் வழங்கியும் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து இன்று மணீஷ் பந்தாரி உபி தியோரியா பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
- ச.ப.மதிவாணன்