உத்தரப் பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்தக் கோயில் இம்மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காகப் பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விழாவில் பங்கேற்க இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 7,000க்கும் மேற்பட்டவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி, உத்தரப் பிரதேசம் மாநில அரசு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், அயோத்தியில் மூலவர் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் ஜனவரி 22ம் தேதி மாநிலத்தின் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் மதுபானக் கடைகள் மாநிலத்தில் திறக்கக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஜனவரி 22ஆம் தேதி கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இலவசமாக படகு சவாரி வழங்கப்படும் என அங்குள்ள படகோட்டும் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர். இது குறித்து ‘மா கங்கா நிஷாத் ராஜ் சேவா’ அறக்கட்டளையில் செயலாளர் கூறுகையில், “இங்குள்ள நிஷாத சமுதாயத்தைச் சேர்ந்த படகோட்டும் தொழிலாளர்களான எங்களுக்கு கடவுள் ராமருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
ராமர், லெட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் நதியை கடந்து காட்டிற்கு செல்ல நிஷாத மன்னரான குகன் உதவி செய்துள்ளார். அந்த சிறப்பை கொண்டாடும் வகையில், ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22ஆம் தேதி பனாரசில் உள்ள கங்கை நதியின் 84 படித்துறைகளிலும் பக்தர்களுக்கு இலவச படகு சவாரி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.