வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க வேண்டும் என போட்டோகிராபரை ஆர்டர் செய்த இளைஞர்கள், போட்டோ எடுக்க வந்த இளைஞரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்து அவரிடமிருந்து கேமரா உள்ளிட்ட உபகரணங்களை திருடிச் சென்ற சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சாய்குமார் (23). புகைப்படக் கலைஞராக இருக்கும் சாய்குமார் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்வுகளுக்கு போட்டோகிராபி செய்து கொடுக்கும் ஃப்ரீலான்சராக பணியாற்றி வந்தார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தான் எடுத்த புகைப்படங்களை பதிவேற்றி வாய்ப்புகளை தேடிக்கொண்டிருந்தார்.
இந்தநிலையில், சாய்குமாரை தொடர்பு கொண்ட இளைஞர்கள் சிலர் தங்கள் வீட்டில் நடைபெறும் சுப நிகழ்ச்சிக்கு போட்டோ எடுத்து தர வேண்டும் என அழைத்துள்ளனர். கோணசீமா மாவட்டம் ரவுலாபாலம் பகுதியில் நிகழ்ச்சி நடைபெறுவதாக சாய்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனை நம்பி சாய்குமார் விலையுயர்ந்த கேமரா, புகைப்பட உபகரணங்களை எடுத்துக்கொண்டு அந்த ஊருக்கு சென்றுள்ளார். ஆனால் இரண்டு நாட்கள் ஆகியும் சாய்குமார் வீடு திரும்பாததால் சாய்குமார் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் சாய்குமார் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரிடம் இருந்து விலையுயர்ந்த கேமராக்களை பறித்த கும்பல் அவரை மணல் பரப்பில் கொலை செய்து புதைத்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.