கரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுபாடுகளை விதித்து வருகிறது. அதேவேளையில், கட்டுபாடுகளுடன் தடுப்பூசி செலுத்திகொள்வதன் மூலமே கரோனா பாதிப்பில் இருந்து விரைவில் விடுபடமுடியும் என்றும் மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்கின்றன. கரோனா தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வந்ததும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதலில் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு சில மாதங்களில் அந்த வயது வரம்பு 45 ஆக குறைக்கப்பட்டது. தற்போது அதன் வரம்பு 18 வயது என நிர்ணயக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநிலகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடித்ததில், “18 முதல் 44 வயதுடையோர் அனைவரும் தனியார் கரோனா தடுப்பூசி மையங்களில் பணம் செலுத்தி தங்களுக்கான தடுப்பூசியை எடுத்து கொள்ளலாம். அதேபோல் அரசு மருத்துவமனைகளிலும் எடுத்துகொள்ளலாம். ஆனால், அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், தங்கள் மாநிலத்தில் எந்த வயதில் இருந்து இலவச தடுப்பூசி என்பதை அந்தந்த அரசுகளே நிர்ணயத்துகொள்ளலாம் ” என்று எழுதியுள்ளார்.
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசம் என அறிவித்துள்ளன. ஆனால், அப்படி அறிவிக்காத மாநிலங்களில், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் எழுதியுள்ள கடிதத்தின்படி 18 முதல் 44 வயது வரை உள்ளவர்கள் பணம் கொடுத்து தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.