திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியின் அண்மைக்கால செயல்பாடுகள், அவர் பிரதமர் பதவிக்குக் காய்களை நகர்த்துவதை வெளிப்படுத்துவதாக கருதப்படுகிறது. ஏற்கனவே தேசிய அரசியலில் நுழையும் முயற்சியாக, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களைத் தன் பக்கம் இழுத்துவரும் மம்தா, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி தற்போது இல்லை” என தெரிவித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், மம்தா தலைமையில் மூன்றாவது அணி உருவாகலாம் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், தேசிய அளவில் சென்று சேர திரிணாமூல் காங்கிரஸ் கட்சி, சில முக்கிய திட்டங்களை வகுத்துள்ளது. முதலாவதாக மம்தா பானர்ஜி குறித்து ஒரு பயோபிக் எடுக்க திரிணாமூல் காங்கிரஸ் முடிவெடுத்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பயோபிக் குறித்த விவாதங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சர்வதேச அளவில் புகழ்பெற்ற சில திரைப்பட இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இந்தப் பயோபிக்கை, முன்னணி ஒடிடி தளங்களில் வெளியிடவும், இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்களுக்கும் சிறிய தொலைக்காட்சி சேனல்கள் மூலம் இந்தப் பயோபிக்கை ஒளிபரப்பவும் திரிணாமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ள 22 மொழிகளிலும் இந்தப் படத்தை வெளியிட அக்கட்சி முடிவு செய்துள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத்தவிர அனைத்து இந்திய திரிணாமூல் காங்கிரஸ் என்ற கட்சியின் பெயரில் மாற்றம் செய்து, பெயரைச் சுருக்க ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும், குறிப்பாக கட்சி பெயரிலிருந்து காங்கிரஸ் என்ற வார்த்தையை நீக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ள அதிகாரபூர்வ வட்டாரங்கள், கட்சியின் விதிமுறைகளில் திருத்தம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகவும் கூறியுள்ளன.