சதுரங்கவேட்டை படத்தில் வருவது போல மந்திரசக்தி கொண்ட ரைஸ்புல்லிங் அரிசி வைத்திருப்பதாகவும், இரு தலைகள் கொண்ட பாம்பு உள்ளதாகவும், பணத்தை இரட்டிப்பாகும் சக்தி தன்னிடம் உள்ளதாகவும் கூறிக்கொண்டு 10 பேரை சயனைட் வைத்து கொன்ற நபரை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஆந்திராவின் எலுரு பகுதியை சேர்ந்த சிவா என்பவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளான். அப்போது தன்னிடம் ரைஸ்புல்லிங் அரிசி, இரு தலைகள் கொண்ட பாம்பு மற்றும் பணத்தை இரட்டிப்பாகும் சக்தி போன்ற பல மந்திர சக்திகள் உள்ளதாகவும் கூறி வந்துள்ளார். ஊரில் உள்ளவர்களை இதனை நம்ப வைப்பதற்காகவும், மோசடியில் ஏற்பட்ட தகராறிலும் கடந்த 2 ஆண்டுகளில் 10 பேரை சிவா கொன்றுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. 2018 ஆண்டில் இருந்து இரண்டு மாதத்திற்கு ஒருவரை கொலை செய்திருப்பதாக கூறப்படுகிறது. சிவாவினால் அவரது சொந்த பாட்டியும் மைத்துனியுமே கொல்லப்பட்டுள்ளதாக தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியராக வேலை பார்த்து வந்த நாகராஜூ என்பவரை கொலை செய்துவிட்டு, அவர் வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்ற சிவாவை சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் பிடித்தனர். அதன்பிறகு நடைபெற்ற விசாரணையின் போதே பிரசாதத்தில் சயனைடை கலந்து 10 பேரை கொலை செய்துள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சதுரங்கவேட்டை பட பாணியில் மக்களை ஏமாற்றி அதற்காக 10 கொலைகளும் செய்துள்ள இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.