இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வருகிறது. அதேநேரத்தில் மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் தொற்றுநோயியல் துறை தலைவர் டாக்டர் சமிரன் பாண்டா, கரோனாவின் மூன்றாவது அலை ஆகஸ்ட் மாத இறுதியில் தேசிய அளவில் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் இந்த இந்த மூன்றாவது அலை, கரோனா இரண்டாவது அலையை போன்று தீவிரமானதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். மேலும் டாக்டர் சமிரன் பாண்டா, இந்த மூன்றாவது அலை நான்கு காரணங்களால் ஏற்படலாம் என கூறியுள்ளார். இதுகுறித்து அவர், "முதலிரண்டு கரோனா அலைகளில் பெறப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் கரோனா மூன்றாவது அலை ஏற்படலாம். நோய் எதிர்ப்பு சக்தியை ஊடுருவும் புதிய மரபணு மாற்றமடைந்த கரோனா உருவாவது மூன்றாவது அலையை ஏற்படுத்தலாம். புதிய மரபணு மாற்றமடைந்த கரோனா உருவாகி, அது நோய் எதிர்ப்பு சக்தியை ஊடுருவவில்லையையென்றாலும், வேகமாக பரவி மூன்றாவது அலைக்கு வழிவகுக்கலாம், மாநிலங்கள் முன்கூட்டியே கட்டுப்பாடுகளை நீக்குவதும் மூன்றாவது அலையை உருவாக்கலாம்" என கூறியுள்ளார்.
டெல்டா ப்ளஸ் கரோனா, மூன்றாவது அலையை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "இனி டெல்டா வகையா கரோனாக்களால் பொது சுகாதார அழிவு ஏற்படும் என நான் எதிர்பார்க்கவில்லை" என கூறியுள்ளார்.