கோவாவில் பொது இடங்களில் மது அருந்த தடை!
கோவா மாநிலத்திற்கு வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் சுற்றுலாப்பயணிகளாக செல்கின்றனர். இவர்களில் பலர் பொது இடங்களில் மது அருந்துவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனிடையே, கோவாவின் பனாஜி பகுதியில் தூய்மை இந்தியா கூட்டத்தில் பேசிய அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கோவாவின் பொதுஇடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது அடுத்த மாதம் முதல் மாநிலம் முழுவதும் அமுலுக்கு வரவுள்ளது. இதையும் மீறி பொதுஇடங்களில், தடை செய்யப்பட்ட பகுதிகளில் மது விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, கடும் தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சாலைவிபத்துகள் குறித்து பேசிய அவர், கோவாவில் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணியவேண்டும் எனவும், பின்பற்றாதவர்களின் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
- ச.ப.மதிவாணன்