புதுச்சேரி லாஸ்பேட்டை இ.சி.ஆர் சாலையில் உலக வங்கி நிதியுதவியுடன் 13 கோடி 42 லட்ச ரூபாய் செலவில் நவீன மீன் அங்காடி கட்டப்பட்டது. தரைத்தளம், முதல் மற்றும் இரண்டாம் தளம் என முழுவதும் குளிரூட்டப்பட்ட மூன்று தளத்தை கொண்ட நவீன மீன் அங்காடியில், 110 கடைகள், ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் கூடம், மீன் அங்காடி, மீன்களை பதப்படுத்தும் நவீன ஃப்ரீசர் பாக்ஸ்கள், கழிவுகளை வெளியேற்றும் கழிவுநீர் வாய்க்கால், குடிநீர், கழிவறை வசதிகள், கேண்டீன் வசதி, விலை உயர்ந்த மீன்களை விற்பனை செய்யவும், பாதுகாத்து வைக்கவும் இரண்டாம் தளத்தில் தனிக்கூடம், வாகன நிறுத்தம், ஜெனரேட்டர் என அனைத்து வசதிகளும் உள்ளன.
கடந்த 2014 பிப்ரவரியில் அவசர அவசரமாக மீன் அங்காடி திறக்கப்பட்டது. பின்னர், பயனாளிகளுக்கு கடைகள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதனால் கடந்த 4 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது. இப்பிரச்னை சட்டசபையில் எதிரொலித்ததன் காரணமாக முதற்கட்டமாக கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவைகளுக்கு முன்னுரிமை கொடுத்து 43 பேரை மீன்வளத்துறை அதிகாரிகள் தேர்வு செய்து உழவர்கரை நகராட்சிக்கு பட்டியல் அனுப்பினர். அதன் அடிப்படையில் 43 பேருக்கு கடை ஒதுக்கப்பட்டு பிப்ரவரி மாதம் நவீன சுகாதார மீன் அங்காடி பயன்பாட்டுக்கு வந்தது.
இந்த அங்காடியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றது. இங்குள்ள கடையில் ஒரு நாள் மீன் விற்பனை செய்ய ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மீனவ பெண்கள் கடலில் இருந்து கொண்டு வரும் மீன்களை சுத்தம் செய்த பின்னரே குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்து விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படியே அவர்களும் மீன் விற்பனை செய்கின்றனர். இந்த அங்காடி திறக்கப்பட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் ஊருக்கு ஒதுக்குபுறமாக உள்ளதால் எதிர்பார்த்தபடி பொதுமக்கள் வருகை இல்லை. ஒரு நாளைக்கு 50 பேர் வருவதே குதிரைக்கொம்பு. அதனால் மீன் விற்பனை மிக மந்தமாக உள்ளது.
நவீன மீன் அங்காடி குறித்து பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் விளம்பரப்படுத்தப்படவில்லை. இதனால் அருகில் உள்ள லாஸ்பேட்டை, தட்டாஞ்சாவடி, சாரம் பகுதி மக்களுக்கே மீன் அங்காடி பயன்பாட்டுக்கு வந்தது தெரியவில்லை. மேலும், மீனவ பெண்கள் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று மீன்களை விற்பது, பேரம் பேசி மீன் வாங்குவது போன்ற வாய்ப்புகள் இல்லாதது போன்ற காரணங்களால் நவீன அங்காடியில் விற்பனை மந்தமாக உள்ளது.
இதுகுறித்து மீன் விற்பனை செய்யும் பெண்கள் கூறும்போது, "நவீன மீன் அங்காடி நகரிலிருந்து 7 கிலோ மீட்டர் தூரம் உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் விற்பனை மந்தமாகவே நடைபெறுகிறது. அங்காடியை பிரபலப்படுத்தும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும். அதேபோல் இங்கு கட்டப்பட்டுள்ள காய், கனி பிரிவுகளையும் விரைவாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். கேண்டீன் இயக்கப்படவில்லை, அதையும் இயக்க வேண்டும். அப்போதுதான் அங்காடியில் பொதுமக்கள் வருகை இருக்கும். விற்பனையும் சூடுபிடிக்கும். இதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்" என்கின்றனர்.
மேலும் நகரப்பகுதியிலிருந்து தள்ளி இருப்பதால் உள்ளூர் மக்களும், வெளியூரிலிருந்து வருபவர்களும் அங்கு சென்று விரும்பும் மீன்களை வாங்க முடியவில்லை என பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதிகப்படியான விளம்பரங்கள் மூலமும், காய், கனி பிரிவுகள், கேண்டீன் ஆகியவற்றை உடனடியாக தொடங்குவதன் மூலமுமே கோடிக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்டதன் பயன் உருப்படியாக இருக்கும்.