இந்தியாவுக்கும், அண்டை நாடான வங்காளதேசத்திற்கும் சுமுக உறவு நீடித்து வருகிறது. இந்த இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் குறித்த செயற்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தாகாவில் நடைபெற்றது. அதில் துறைமுகக் கட்டுப்பாடுகளை அகற்றுவது, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தைத் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் அதில், இந்தியாவின் நிதியுதவிடன் வங்காளதேசத்தில் 3 வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட இருந்தன.
இந்த நிலையில், பிரதமர் மோடியும், வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் கூட்டாகச் சேர்ந்து எல்லைப் பகுதியில் ரயில் பாதை திட்டம், மின்துறை வளர்ச்சி திட்டம் ஆகியவற்றை நேற்று (01-11-23) காணொளி மூலம் தொடங்கி வைத்தனர். இரு நாட்டு எல்லைகளை இணைக்கும் திரிபுரா மாநிலம் நிஸ்சிந்தர்பூருக் - கங்காசாகர் எல்லை ரயில் பாதை இணைப்பு திட்டம், குல்னா - மோங்லா துறைமுக ரயில் பாதை திட்டம், வங்காளதேசத்தின் ரம்பால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மைத்ரீ சூப்பர் அனல்மின் நிலையம் ஆகிய 3 வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
இதில், நிஸ்சிந்தர்பூருக் - வங்காளதேசத்தின் கங்காசாகர் இடையில் போடப்பட்ட ரயில் பாதை திட்டமானது வடகிழக்கு மாநிலங்களுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையே போடப்பட்ட முதல் ரயில் பாதை ஆகும். சுமார் 15 கி.மீ தூர அளவிற்கு போடப்பட்ட இந்த ரயில் பாதை திட்டத்திற்கு இந்தியா ரூ.392 கோடி மானிய உதவியாக வங்காளதேசத்திற்கு வழங்கியிருக்கிறது. அதேபோல், வங்காளதேசத்தின் குல்னாவுக்கும், மோங்லா துறைமுகத்துக்கும் இடையே போடப்பட்ட இரண்டாவது ரயில் பாதை திட்டத்திற்கு சுமார் 65 கி.மீ தூர அளவிற்கு ரயில் பாதை போடப்பட்டுள்ளது.
மேலும், வங்காளதேசத்தின் ராம்பல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 1,320 மெகாவாட் திறனுள்ள சூப்பர் அனல் மின் நிலையம், இந்தியாவின் சலுகை நிதியுதவி திட்டத்தின் கீழ் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு, காணொளி வாயிலாக இருநாட்டு பிரதமர்களும் பேசி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதில் பேசிய பிரதமர் மோடி, “இந்தியா - வங்காளதேசம் இடையிலான ரயில் பாதையை திறந்து வைத்தது என்பது வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். இதுதான், வடகிழக்கு மாநிலங்களுக்கும், வங்காளதேசத்துக்கும் இடையிலான முதலாவது ரயில் பாதை” என்று கூறினார்.