Skip to main content

காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் பெல்லட் #VICTIM

Published on 12/08/2019 | Edited on 12/08/2019

காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதுமே ஆகஸ்ட்.05-ந்தேதி, பெல்லட் குண்டுகளால் தாக்கப்படும் காஷ்மீரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. அதில் முதல்நபர் அகீல் தார் எனும் 17 வயது சிறுவன்!
 

pellet

 

 

அவரது வலதுகண்ணில் ஒன்பது பெல்லட்டுகளும், இடதுகண்ணில் நான்கு பெல்லட்டுகளும் இருந்தன. முகம் முழுவதும் காயத்தால் வீங்கியிருந்தது. கண்கள் ரத்தச் சிவப்பாக மாறியிருந்தன. முதற்கட்ட சோதனையில் அவரது வலதுகண் பார்வையிழந்ததும், இடதுகண் கடுமையாக பாதிக்கப்பட்டதும் தெரியவந்தது. அதற்குமுன்பே அகீல் தன் கதறலால் மருத்துவமனை முழுவதற்கும் இதனை சேதியாக சொல்லிவிட்டார். 

நாடாளுமன்றத்தில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்புச் சட்டங்கள் 370 மற்றும் 35-ஏ ஆகியவை ரத்தாவதாக அறிவிக்கப்படுவதற்கு முந்தைய தினமான ஆகஸ்ட் 4-ந்தேதியே, காஷ்மீரின் அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டன. அகீலும், அவரது 50 வயது தந்தையான குலாம் முகமது தாரும் ஆகஸ்ட் 05-ஆம்தேதி மற்ற எல்லா சேனல்களும் இணைப்பை இழந்துவிட்ட நிலையில், இந்தியா டுடே சேனலில் நாடாளுமன்ற நிகழ்வுகளை டிவியில் பார்த்துக் கொண்டிருந்தனர். 

அதன்பிறகு நடந்தவற்றை விவரிக்கும் அகீல், “ஏற்கனவே, பள்ளத்தாக்கு முழுவதும் ஆயிரக்கணக்கான படைவீரர்கள் குவிக்கப்பட்டு, இயல்புநிலை பறிபோயிருந்தது. படைவீரர்களின் எண்ணிக்கை நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகளும், அமர்நாத் யாத்ரீகர்களும் வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வரப்போகிறது என்றுதான் நாங்கள் எண்ணியிருந்தோம். சரியாக காலை 11.19 மணிக்கு அமித்ஷா காஷ்மீர் தொடர்பான இரண்டு மசோதாக்களை மேலவையில் தாக்கல் செய்தபிறகுதான், இதற்கெதிராக யாரும் போராடக்கூடாது என்பதற்கான ஏற்பாடுகள்தான் இவை என்பது விளங்கியது. இந்த ஜனநாயகமற்ற நடவடிக்கையை காஷ்மீர் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை அரசு நன்கு அறிந்திருந்தது” என்கிறார்.

உடனடியாக பா.ஜ.க. அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பிக்கொண்டு பொதுமக்கள் காஷ்மீர் வீதிகளில் போராட்டங்களில் குதித்தனர். அவர்களை விரட்டுவதற்காக கைகளில் ஆயுதங்களுடன் ராணுவப் படையினரும் களமிறங்கினர். அந்த சமயத்தில் வெளியே என்ன நடக்கிறது என்பதையறிய தன் வீட்டிலிருந்து வந்தபோதுதான், கையில் போராட்டக்காரர்களை விரட்டப் பயன்படும் பெல்லட் குண்டுகளை நிரப்பிய துப்பாக்கியுடன் ஒரு படைவீரர் தாக்குவதற்காக காத்திருப்பதை உணர்ந்திருக்கிறார் அகீல். அதிலிருந்து தப்புவதற்காக திரும்பிய நொடியில் துப்பாக்கி துப்பிய பெல்லட் குண்டுகள் அகீலின் முகம், கண்கள் மற்றும் மார்புப் பகுதியில் பாய்ந்தன. 

உதவுவார் யாருமின்றி அங்கேயே துடித்திருந்த அகீலின் வலதுகண்ணின் லென்ஸில் காயமேற்பட்டு, அதன் ரெட்டினாவை சூடான பெல்லட்டுகள் துண்டுதுண்டாக்கின. உறவினர்கள், நண்பர்கள் சேர்ந்து அகீலை அங்கிருந்து மருத்துவமனைக்குத் தூக்கிச்செல்லும் வழியிலும் ஏராளமான தடுப்புகளை ஏற்படுத்தி, முடக்கி வைத்திருந்தனர் பாதுகாப்புப் படையினர். 

“பார்வை போச்சே… கண்ணு தெரியலையே” என்று அலறித்துடித்த அகீலின் குரலை, யாராலும் நிறுத்த முடியவில்லை. எக்ஸ்-ரே அறைக்குக் கூட்டிச்சென்று அகீலின் உடலில் எத்தனை பெல்லட்டுகள் இருக்கின்றன என்பது உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 90 பெல்லட் குண்டுகள். சில நிமிடங்களில் அறுவைச் சிகிச்சை வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு உடலில் இருந்த குண்டுகள் அப்புறப்படுத்தப்பட்டன. முகமும், கண்களும் வீங்கியே இருந்ததால் அதிலிருந்த குண்டுகள் பிறகு வெளியேற்றப்படும் என அறிவித்து, 8-வது வார்டுக்கு அனுப்பியது மருத்துவமனை நிர்வாகம். 

இரண்டு நாட்களுக்கு மேல் அங்கு யாரையும் தங்கவைப்பது கிடையாது என்பதால், முகம் மற்றும் கண்களின் வீக்கம் குறையும்போது, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குப் பிறகு அறுவைச் சிகிச்சைக்காக வருமாறு கூறியிருக்கிறது மருத்துவமனை நிர்வாகம். அடுத்த சில மணிநேரங்களிலேயே பெல்லட் குண்டுகளால் தாக்கப்பட்ட ஏராளமானவர்கள் அங்கே துடித்தபடி குவிந்துகொண்டிருந்தது அதற்கான காரணம். வெளியே சென்றால் தன்னை காவல்துறை கைதுசெய்யுமோ என்று அஞ்சி அகீல் வெளியே செல்ல மறுத்த நேரத்தில், அவருக்கு பக்கத்து படுக்கையில் ஒரு ஒன்பது வயது சிறுவன் அனுமதிக்கப் பட்டிருந்தான்.

அகீல் 2017-ல் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர். அஃப்சல் குரு நினைவுதினத்தை ஒட்டி, காஷ்மீரில் போராட்டங்கள் வெடித்த சமயத்தில், இறுதித்தேர்வுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு, போராட்டத்தில் கலந்துகொண்டதாகக் கூறி அகீல் கைதுசெய்யப்பட்டார். 18 நாட்களுக்குப் பிறகு பள்ளிப்படிப்பை இழந்த இளைஞனாக வெளிவந்த அகீல், தினக்கூலியாக ஆகிப்போனார். காஷ்மீரில் அகீலைப் போல ஏராளமான இளைஞர்கள் உண்டு. 
 

pellet kashmir

 

 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தைப் பறித்ததன் மூலம் ஒருங்கிணைந்த இந்தியா உருவாகி இருப்பதாக, பலரும் புளகாங்கிதம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், “இங்கிருக்கும் ஒவ்வொருவரும் பா.ஜ.க. அரசு காஷ்மீருக்கான சிறப்பு சட்டங்களை பலவந்தமாக பறித்திருப்பதை அறிவார்கள். ஆனால், வாய்திறக்க மறுக்கிறார்கள். இங்கிருக்கும் ஒட்டுமொத்த காஷ்மீரிகளும் கொல்லப்பட்ட பிறகு மட்டுமே, நாங்கள் படும் துன்பம் என்ன என்பதை அவர்கள் உணர்வார்கள்” என்கிறார் வேதனைமிகுந்த குரலில், அகீல்… காஷ்மீரின் மண்ணின் மைந்தனாக. 

 

நன்றி : தி வயர் https://thewire.in/security/kashmir-article-370-pellet-victim

 

 

சார்ந்த செய்திகள்