அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற காந்தாரா திரைப்பட பாணியில் நடனம் ஆடியவர்கள் தீயில் சிக்கிக் கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் எரகுண்ட்லா பகுதியில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது நடன நிகழ்ச்சிகளுக்கும் விழக்குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்பொழுது காந்தாரா திரைப்படத்தில் வரும் பஞ்சுருளி வேடம் அணிந்த இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். தொடர்ந்து காந்தாரா படத்தில் வருவதைப் போலவே நெருப்பிற்கு நடுவே நடனமாட ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவர்களை சுற்றி நாலாபுறமும் வட்டமாக பெட்ரோல் ஊற்றப்பட்டு தீ வைக்கப்பட்டது. அப்பொழுது திடீரென எரிந்து கொண்டிருந்த தீயானது நடனமாடியவர்களின் உடைகளை பற்றி எரிய ஆரம்பித்தது. நடனம் ஆடியவர்கள் மட்டுமல்லாது சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களும் தீயில் விழுந்தனர். இந்த விபத்தில் தீக்காயமடைந்த எட்டு பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.