உலகம் முழுவதும் கரோனா ஏற்படுத்திய பாதிப்புகள் என்பது சொல்லி மாளாது. பொருளாதார ரீதியாக உலக நாடுகள் கரோனா தொற்றால் ஸ்தம்பித்து நிற்கின்றன. கோடிக்கணக்கானவர்கள் இதனால் வேலை இழந்து போய் உள்ளார்கள். இந்தியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை மற்றும் உணவு இன்றி பல்வேறு மாநிலங்களில் இன்றும் தவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் சலவை தொழிலாளிகள், சலூன் கடைக்காரர்கள், தையற்காரர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகளை வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். மார்ச் மாதத்தில் இருந்து பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் இவர்கள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் இந்த அறிவிப்பை அறிவித்துள்ளார். அந்த வகையில் 2.47 லட்சம் பேருக்கு தலா 10 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். இதனால் அந்த தொழிலாளர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளார்கள். இந்த அறிவிப்பு நிம்மதியும், மகிழ்ச்சியும் தங்களுக்கு தருவதாக அந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.