உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனம் மற்றும் ஸ்பேஸ் - எக்ஸ் விண்வெளி ஆய்வு மைய நிறுவனருமான எலான் மஸ்க் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரைக் கடந்த 2022 ஆம் ஆண்டு தன்வசப்படுத்திக் கொண்டார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இதனிடையே, எலான் மஸ்க் நாளை (21-04-24) இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், இந்தியாவுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு எலான் மஸ்க் தனது பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
ஏப்ரல் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்த எலான் மஸ்க், பிரதமர் மோடியை சந்தித்து இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் ஏதாவது ஒன்றில் டெஸ்லா கார் தொழிற்சாலையை தொடங்க திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவர், இந்தியாவில் 20 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், எலான் மஸ்க்கின் இந்த பயணம் திடீரென ரத்தாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து எலான் மஸ்க் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “துரதிருஷ்டவசமாக, மிகவும் கடுமையான டெஸ்லா கடமைகள் இந்தியாவிற்கு வருகை புரிவதை தாமதப்படுத்த்தியுள்ளன. ஆனால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் நான் வருகை தருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.