நாடு முழுவதும் மின் உற்பத்தியாளர்களுக்கு மின்பகிர்மான கழகங்கள் செலுத்த வேண்டிய நிலுவை ரூபாய் 1.21 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 20,788 கோடியாக அதிகரித்துள்ளது.
மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் இருந்து அந்தந்த மாநில மின்பகிர்மான கழகங்கள் மின்சாரத்தை வாங்கி விநியோகம் செய்கின்றனர். மத்திய அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் படி, நாடு முழுவதும் உள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு மின் பகிர்மான கழகங்கள் ரூபாய் 1.21 லட்சம் கோடி ரூபாயை நிலுவையாக வைத்துள்ளனர்.
ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிகளவில் நிலுவை வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. வழக்கமாக மின் உற்பத்தி நிறுவனங்கள் 44 நாட்களுக்குள் நிலுவைத் தொகை செலுத்தவில்லை எனில், மின்பகிர்மான கழகங்களுக்கு அபராதம் விதிக்கின்றன.
கடந்த ஆண்டு கரோனா பெருந்தொற்றைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மின் பகிர்மான கழகங்களுக்கு நிவாரணம் வழங்கியதோடு அபராத தொகையையும் தள்ளுபடி செய்தது. இருப்பினும், மின் பகிர்மான கழகங்களின் நிலுவைத் தொகை அதிகரித்துள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலம் மின் உற்பத்தி நிறுவனங்களுக்கு 22,627 கோடி ரூபாயும், தமிழ்நாடு 20,788 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது.
கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் மின்கட்டணம் உயர்த்தப்படாமல் இருப்பதால், வருவாய் இன்றி இருப்பதாகக் கூறும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அதிகாரிகள், மின் கொள்முதல் விலை பல மடங்கு உயர்ந்திருப்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.