மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி, எட்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும், பாஜகவிற்கு இடையே நேரடியான போட்டி இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலையொட்டி மம்தா, தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் மார்ச் 10ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதனைத்தொடர்ந்து அன்று மாலை, போலீஸார் அருகில் இல்லாதபோது தன்மீது சிலர் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டினார். தொடர்ந்து வலியால் துடித்த அவர், ‘இது ஒரு திட்டமிடப்பட்ட சதி’ எனக் குற்றஞ்சாட்டினார். இதன்பிறகு மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மம்தாவின் கால், கை, கழுத்துப் பகுதி எலும்புகளில் பெரிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளன என தெரிவித்தனர். இதன்பிறகு மருத்துவமனை கண்காணிப்பில் இருந்த மம்தா, சக்கர நாற்காலியில் இருந்தபடியே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே மம்தா காயம் அடைந்தது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் விசாரித்து வந்தது. இந்தநிலையில் இசட்+ பாதுகாப்பில் இருக்கும் மம்தா பானர்ஜி காயம் அடைந்த சம்பவத்திற்கு, பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றாததே காரணம் என இந்திய தேர்தல் ஆணையத்திற்கு சிறப்பு தேர்தல் பார்வையளர்கள் அறிக்கை அளித்தனர். இந்த அறிக்கையின் அடைப்படையில் மேற்கு வங்கத்தின் பாதுகாப்பு இயக்குனர் விவேக் சஹாய், மிட்னாபூரின் கிழக்கு எஸ்.பி. பிரவீன் பிரகாஷ் ஆகிய இருவரையும் இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக மாவட்ட நீதிபதியை இடம் மாற்றவும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல் பாதுகாப்பு தோல்விக்காக எஸ்.பி. பிரவீன் பிரகாஷ் மீது வழக்குப் பதிவுசெய்யவும் உத்தரவிட்டுள்ள தேர்தல் ஆணையம், ஒரு பாதுகாப்பு இயக்குனராக, இசட்+ பாதுகாப்பில் இருக்கும் ஒருவருக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய முக்கிய கடமையிலிருந்து விவேக் சஹாய் தவறிவிட்டதாக கூறி அவர் மீதும் வழக்குப் பதிவுசெய்ய உத்தரவிட்டுள்ளது. சிறப்பு பார்வையாளர்கள் அளித்துள்ள அறிக்கையில், மம்தா மீது திட்டமிட்டு தாக்குல் நடத்தப்பட்டது என கூறுவதற்கு எந்தப் புள்ளியும் இல்லை. அதேநேரம் விசாரணை நடந்துகொண்டிருப்பதால், தற்போது எந்த முடிவுக்கும் வரமுடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.