
பா.ஜ.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, இன்று (24/06/2022) மாலை 05.00 மணியளவில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இந்த நிகழ்வின் போது, தேனி தொகுதியின் மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், "குடியரசுத் தலைவர் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திரௌபதி முர்முவுக்கு மனப்பூர்வமாக முழு ஆதரவு உண்டு. அ.தி.மு.க.வின் ஆதரவுக் கோரி விரைவில் சென்னை வருவதாக திரௌபதி முர்மு கூறியுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக திரௌபதி முர்மு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்த நிலையில், ஆதரவு திரட்டும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.